மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கப்பல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலால் ஒட்டுமொத்த கடல்சார் போக்குவரத்து வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதியளித்துள்ளது.
பாகிஸ்தானின் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் இந்த முக்கிய கடல் வழியைப் பயன்படுத்த ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். இதன்படி, தினசரி இரண்டு கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும் எனவும், ஈரானின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை பாராட்டுக்குரியது எனவும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் காலிபாப் பாகிஸ்தானிய கப்பல்களின் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள போதிலும், ஈரான் அதனை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், கடல்சார் போக்குவரத்து தரவுகளின்படி (Marine Traffic), இரண்டு பெரிய சீன கொள்கலன் கப்பல்கள் கடந்த திங்கட்கிழமை (30) ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தை நோக்கிப் பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் கடந்த வார இறுதியில் இந்த நீரிணையைக் கடந்துள்ளன. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எட்டப்பட்ட இராஜதந்திர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி தொடரும் என ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.









