மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் தொடர்பான போர்ச் சூழலால் உலகளாவிய எரிபொருள் விலை உச்சமடைந்துள்ள நிலையில், ரஷ்யா தனது பெற்றோல் ஏற்றுமதியை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யத் தீர்மானித்துள்ளது. இந்தத் தடையானது ஜூலை 31 ஆம் திகதி வரை நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நொவாக், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து சந்தையை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தடையை அமுல்படுத்தும் அரசாங்க ஆணையை வரைவு செய்யுமாறு சக்தி வள அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நெருக்கடியால் உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை மற்றும் ஜனாதிபதி புட்டினின் விலை கட்டுப்பாட்டு இலக்குகளை எட்டுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உக்ரேனிய படைகள் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தி வரும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ரஷ்யாவின் உற்பத்தித் திறனில் சுமார் 10 சதவீதத்தைப் பாதித்துள்ளன. குறிப்பாக கிரிஷி (Kirishi) மற்றும் சரடோவ் (Saratov) ஆகிய பிரதான சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இம்மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ரஷ்யாவின் உள்நாட்டு விநியோகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. எனினும், கச்சா எண்ணெய் (Crude Oil) ஏற்றுமதியில் இந்தத் தடை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 120 டொலர் வரை அதிகரித்துள்ள சூழலில், உலகின் முன்னணி எரிபொருள் உற்பத்தியாளரான ரஷ்யாவின் இந்தத் தடை உத்தரவு சர்வதேச சந்தையில் மேலும் விலை அதிகரிப்பைத் தூண்டலாம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.









