2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று (31.03.2026) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உட்பட மொத்தம் 281,810 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 62.64 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதேவேளை, பல்வேறு மோசடிகள் மற்றும் விதிமீறல்கள் காரணமாக 111 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இணையத்தளம் ஊடாகப் பெறுபேற்று அட்டவணைகளைத் தரவிறக்கம் செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்தங்களுக்கு (Re-Correction) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை ஒன்லைன் (Online) ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.ஜே.எம்.என். ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற அவசர அழைப்பு இலக்கம் அல்லது திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.









