மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாய் கடற்பரப்பில் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற குவைத்திற்குச் சொந்தமான பிரம்மாண்ட கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தித் தீவைத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (30) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்காவிட்டால் அந்நாட்டின் எரிசக்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகளை அமெரிக்கா அழித்துவிடும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் 200 மில்லியன் டொலருக்கும் அதிக பெறுமதியுடைய 2 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் சடுதியாக உயர்வடைந்துள்ளன. கப்பலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்துக் கண்டறியப்பட்டு வருவதுடன், பாரிய எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கப்பலின் உரிமையாளரான குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Kuwait Petroleum Corporation) கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்முஸ் வளைகுடா பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளைத் தாங்கிய ட்ரோன்கள் மூலம் கடந்த ஒரு மாத காலமாகத் தொடரும் இந்த மோதல்கள், உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான உயிர்களையும் பலிவாங்கியுள்ளன.
ஈரானின் இந்தத் தொடர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயங்காது என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளமை சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.









