இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை, மக்களின் மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மனநல மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமத்திய ரேகைக்கு அருகாமையில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் வெப்பத்திற்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்த போதிலும், அதீத வெப்பம் காரணமாக மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் அமைதியற்ற நிலை என்பன ஏற்பட வாய்ப்புள்ளதாக மனநல மருத்துவ நிபுணர் விந்தியா விஜேபண்டார தெரிவித்துள்ளார்.
வெப்பமானது உடலின் பௌதீக மற்றும் இரசாயன சமநிலையைப் பாதிப்பதுடன், அதன் விளைவாக மனிதனின் மனநிலை, நித்திரை மற்றும் ஞாபகசக்தி, அவதானிப்புத் திறன், தீர்மானம் எடுக்கும் திறன் போன்ற அறிவாற்றல் செயற்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நீண்டகாலமாக மருந்து உட்கொள்பவர்கள் இந்த வெப்பத்தினால் அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய அபாயக் குழுவினராக இனங்காணப்பட்டுள்ளனர்.
ஞாபக மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களது ஞாபகசக்திப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கடும் வெப்பமான காலப்பகுதியில் மது அருந்துவது மன ஆரோக்கியத்தை மேலும் சீர்குலையச் செய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிச்சல் அடைதல், தூண்டுதல் பேரில் சட்டெனச் செயற்படுதல் மற்றும் உளவியல் ரீதியான நல்வாழ்வு வீழ்ச்சியடைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவை வெப்பத்தின் பாதிப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வெப்பத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க, சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டிற்குப் பதிலாகத் தியானம், இசை கேட்டல், உள்ளக உடற்பயிற்சிகள், யோகாசனம் அல்லது வீட்டுத் தோட்டம் செய்தல் போன்ற மனதிற்கு அமைதி தரும் விடயங்களில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மின்விசிறிகள் அல்லது குளிரூட்டிகளைப் (Air Conditioning) பயன்படுத்துவதுடன், சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இக்காலப்பகுதியில் மன ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









