அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், நடைமுறையில் இந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை, மாறாகக் குறைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக எரிபொருள் கொடுப்பனவுகள் ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி நிலவும் சந்தை விலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுவது வழமையாகும். இருப்பினும், அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்தின்படி, ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகளைக் கணக்கிடுவதற்கு 2026 மார்ச் முதலாம் திகதி நிலவிய எரிபொருள் விலையையே அடிப்படையாகக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத காலப்பகுதியில் எரிபொருள் விலைகள் இரண்டு முறை திருத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக, வழங்கப்படுகின்ற பணக் கொடுப்பனவின் அளவு மாற்றமடையாத போதிலும், அந்தப் பணத்திற்குப் பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருளின் லீற்றர் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் விளக்கியுள்ளார். "சுருக்கமாகக் கூறின், இது ஒரு அதிகரிப்பு அல்ல. தற்போதைய சந்தை விலைக்கு ஏற்பக் கொடுப்பனவு மாற்றியமைக்கப்படாததால், உண்மையில் லீற்றர் அளவில் எரிபொருள் உரிமை குறைக்கப்பட்டுள்ளது," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, மேலதிக அறிவித்தல் வரும் வரை மார்ச் முதலாம் திகதி நிலவிய விலைகளே அனைத்து எரிபொருள் சார்ந்த கொடுப்பனவுகளுக்கும் அடிப்படையாக அமையும் என அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.









