மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக மூடப்படும் பட்சத்தில், உலகளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம் (Kiel Institute for the World Economy) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, இந்த நீரிணை ஊடான போக்குவரத்து தடைப்பட்டால் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புப் பட்டியலில் சிம்பாப்வே (30% உயர்வு) முதலிடத்தில் உள்ள நிலையில், இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியானது வெறும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் மட்டும் நின்றுவிடாது, நாட்டின் விவசாய உற்பத்திக்குத் தேவையான உர விநியோகத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே இலங்கைக்குத் தேவையான 36 சதவீத உர இறக்குமதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெட்ரோ கெமிக்கல் சார்ந்த இந்த உரங்களின் வரத்து தடைப்படுவதால், உள்நாட்டு விவசாய உற்பத்தி வீழ்ச்சியடைந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இது நடுத்தர வர்க்க மக்களுக்குப் பாரிய சுமையாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை, BBC Verify தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வழமையாக ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணையில், தற்போதைய பதற்ற நிலை காரணமாக ஒரு சில கப்பல்கள் மாத்திரமே பயணிப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த 95 சதவீத வீழ்ச்சியானது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் அரசாங்கம் மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருகின்ற போதிலும், சர்வதேசச் சந்தையில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் பாரிய விலையேற்றத்தை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









