உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா (Meta), தனது நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேலும் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அண்மைக்காலமாகப் பாரிய ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில், மெட்டா நிறுவனமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியான பணிநீக்கங்களை முன்னெடுத்து வருகின்றது.
பணிநீக்கம் செய்யப்படும் துறைகள்
இந்த புதிய ஆள்குறைப்பு நடவடிக்கையானது பிரதானமாக விற்பனை (Sales), மனிதவள மேலாண்மை (HR) மற்றும் வன்பொருள் (Hardware) ஆகிய பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் 1,000 ஊழியர்களையும், பெப்ரவரி மாதத்தில் சுமார் 3,500 ஊழியர்களையும் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாற்று ஏற்பாடுகள்
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், "பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்திற்குள்ளேயே வேறு பிரிவுகளில் வேலை வழங்குவது அல்லது வெளி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் இந்த அதிரடித் தீர்மானம், தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிறுவனங்கள் இவ்வாறான ஆள்குறைப்புகளைச் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.








