மத்திய கிழக்கில் நீடித்து வரும் உக்கிரமான போர்ச் சூழல் மற்றும் கடல்சார் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டிய பில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான லம்போகினி உள்ளிட்ட ஆடம்பர வாகனங்கள் தற்போது இலங்கையில் முடங்கிக் கிடக்கின்றன.
ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பழைய சொகுசு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகம், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டமையால் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக, கப்பல்களில் கொண்டு வரப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் வேறு வழியின்றி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளன.
துபாய்க்குப் பதில் அம்பாந்தோட்டை
யப்பானைச் சேர்ந்த முன்னணி வாகன ஏற்றுமதியாளரான ஹைதர் அலி (Hyder Ali) என்பவருக்குச் சொந்தமான 500 இற்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றி வந்த கப்பல், துபாய் துறைமுகத்தை அடைய முடியாமல் தவித்துள்ளது. துபாயில் நிலவும் சரக்கு நெரிசல் மற்றும் போர்க்கால அச்சுறுத்தல் காரணமாக, அந்த வாகனங்கள் கடந்த வாரம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்காலிகமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன.
இதில் சுமார் 50 சொகுசு வாகனங்கள் (Rolls-Royces, Lamborghinis, Ferraris) அடங்குவதுடன், அவை துபாயில் உள்ள கோடீஸ்வர வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டு வரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தேக்கமடைந்துள்ள பழைய வாகனச் சந்தை
ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலிருந்து ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குப் பழைய வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் பொதுவாக மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே உச்சத்தில் இருக்கும். ஆனால், தற்போதைய போர்ச் சூழலால் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் அந்தந்த நாடுகளின் சேமிப்புக் கிடங்குகளிலேயே முடங்கியுள்ளன.
அம்பாந்தோட்டையில் இறக்கப்பட்டுள்ள இந்த லம்போகினி கார்களை மீண்டும் யப்பானுக்கே கொண்டு செல்வதா அல்லது போர் முடிவடையும் வரை இலங்கையிலேயே வைத்திருப்பதா என்பதில் வர்த்தகர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். ஒரு வாகனத்தைத் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு ஒரு நாளைக்கு 5,000 டொலர்கள் வரை மேலதிக வைப்புத் தொகையைச் கப்பல் நிறுவனங்கள் கோருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்குக் கிடைக்குமா?
இலங்கை அரசாங்கம் வாகன இறக்குமதித் தடைகளைத் தளர்த்தியுள்ள போதிலும், இவை "மறு ஏற்றுமதிக்காக" (Transshipment) கொண்டு வரப்பட்ட வாகனங்கள் என்பதால், இவற்றை இலங்கைச் சந்தையில் விற்பனை செய்ய முடியாது. எனினும், இந்த வாகனங்கள் துறைமுகத்தில் தங்கியிருப்பதன் மூலம் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கு குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார அவதானிகள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கு போர் இன்னும் எத்தனை வாரங்களுக்கு நீடிக்கும் என்பது தெரியாத நிலையில், ஆசியாவின் பழைய வாகன வர்த்தகம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.






