மத்திய கிழக்கில் யுத்தம் உக்கிரமடைந்து வருகின்ற ஒரு அபாயகரமான சூழலில், உலகளாவிய ரீதியில் விநியோகச் சங்கிலியில் பாரிய முடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்க முயற்சிக்கும் எவரும் "கடுமையான இராணுவ நடவடிக்கைகளை" எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிரி நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு இந்தப் பாதை இனி கிடையாது எனவும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று மாத்திரம் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற மூன்று பாரிய சரக்குக் கப்பல்கள் ஈரானியப் படைகளால் வழிமறிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் வெறும் பொய்கள் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தவறான அறிவிப்புக்களை நம்பியே குறித்த மூன்று கப்பல்களும் நீரிணையைக் கடக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், அமெரிக்காவின் இராஜதந்திர ஏமாற்று வேலைகளுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டுள்ள இந்தப் பாதை மூடப்பட்டமையானது, சர்வதேசச் சந்தையில் பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகளை வரலாறு காணாத உச்சத்திற்கு இட்டுச் செல்லும் எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, ஈரானின் இந்தத் தீர்மானமானது இலங்கையைப் போன்ற இறக்குமதிப் பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடுகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஏற்கனவே பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதானது உர இறக்குமதி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தை முற்றாக முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரான் மேற்கொண்டுள்ள இந்தத் தற்காப்பு நடவடிக்கை சர்வதேச இராஜதந்திர மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் ஒரு பாரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தோற்றுவிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.









