ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரத் கணேகொட தனது பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது நியமனம் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த நியமனமானது ஆரம்பத்திலிருந்தே முரண்பாடுகள் நிறைந்த ஒன்றாகக் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, ஹெய்லீஸ் (Hayleys) நிறுவனத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சரத் கணேகொட ஆகியோரின் ஈடுபாடு, விமானச் சேவைகள், தளவாடங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய துறைகளில் பாரிய நலன்சார் முரண்பாடுகளை (Conflict of Interest) ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நியமனங்கள் நிர்வாகத் தரத்தில் பாரிய கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் தணிக்கை நிறுவனமான ஈ.ஒய் (EY) ஆகியவற்றின் பங்களிப்பு குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், தேசிய விமானச் சேவை நிறுவனத்தின் ஆளுமை தொடர்பான கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தான் மேலதிக விபரங்களை வழங்கப்போவதில்லை எனவும், ஆர்வமுள்ளவர்கள் சுயாதீனமாக இதனை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் மற்றுமொரு ஆலோசகரான ஹான்ஸ் விஜயசூரியவின் செயற்பாட்டைப் பாராட்டியுள்ள ஹர்ஷ டி சில்வா, அவர் தனது ஆலோசனைப் பதவியை ஏற்பதற்கு முன்னர் தனியார் துறைப் பொறுப்புகளிலிருந்து விலகியமை முறையான ஒரு அணுகுமுறை எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறான நேர்மையான நடைமுறைகளே அரச நிர்வாகத்தில் பேணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.









