இலங்கையின் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் (HIP) உட்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 106 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புதிய முதலீட்டு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் (HIPG) இந்த நிதியைப் பயன்படுத்தி, துறைமுகத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம், இத்துறைமுகத்தை வெறும் வாகன மீள்ஏற்றுமதி மையமாக மட்டும் அன்றி, ஆசியாவின் ஒரு பிரதான கொள்கலன் நுழைவாயிலாக (Major Container Gateway) மாற்றுவதே பிரதான நோக்கமாகும்.
இந்த முதலீட்டின் கீழ், ஆண்டுக்கு 2 மில்லியன் கொள்கலன்களைக் (TEU) கையாளும் வகையில் புதிய முனையங்கள் மற்றும் அதிநவீன பாரந்தூக்கிகள் நிறுவப்படவுள்ளன. இத்திட்டம் நிறைவடையும் போது, தெற்காசிய பிராந்தியத்தின் மிக முக்கியமான விநியோக மையமாக அம்பாந்தோட்டை உருவெடுக்கும் என்பதுடன், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







