டிட்வா (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவதற்கும், மீள்வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் கடந்த 28 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாதிப்புகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
இக்கலந்துரையாடலின் போது, மாவட்ட செயலகங்கள் ஊடாக நட்டஈடு வழங்கும் நடைமுறைகள் மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி பிரதமருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக, சட்டபூர்வமான காணி உரிமை அற்ற மலையகத் தமிழ் மக்கள், அரசாங்கத்தின் நிவாரணங்கள் மற்றும் நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாகக் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீண்டகால மீள்வகுப்புத் திட்டத்தின் கீழ், 20,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், பகுதியளவில் சேதமடைந்த 115,000 வீடுகளைப் புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த தெரிவித்தார். பாதுகாப்பான காணி உரிமையைக் கொண்டுள்ள தனிநபர்கள் வீடுகளை அமைப்பதற்கு 5 மில்லியன் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளதுடன், நகர்ப்புறங்களில் சகல வசதிகளுடனான வீட்டுத் தொகுதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களின், குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையோரின் உடல், உள மற்றும் சமூக நல்வாழ்வைச் சிவில் அமைப்புகள் மற்றும் விசேட குழுக்கள் ஊடாகத் தொடர்ந்து கண்காணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மீள்கட்டுமானப் பணிகள் அனைத்தும் எதிர்கால அனர்த்தங்களால் பாதிக்கப்படாத பாதுகாப்பான இடங்களிலேயே அமைய வேண்டும் என்பதைப் பிரதமர் ஹரினி அமரசூரிய இதன்போது வலியுறுத்தினார்.









