மத்திய கிழக்கில் உக்கிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகளைச் சீர்செய்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கிய துரிதமான ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி, உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் எழுந்துள்ள சவால்கள் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடிகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சில நாட்களுக்கு முன்னர் விரிவாகக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, இந்தியாவின் அவசரகால உதவியின் கீழ் 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நேற்றைய தினம் (28) கொழும்பை வந்தடைந்துள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில் இலங்கையின் வேண்டுகோளை ஏற்று, காலோசிதமான உதவியினை வழங்கியமைக்காக இந்தியப் பிரதமர் மோடிக்கும், இந்த விநியோகச் செயல்பாடுகளைத் தடையின்றி ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி தனது விசேட பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் சர்வதேச ரீதியாகப் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த 'நேசக்கரம்' இலங்கையின் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
🐦 X/Twitter Post
https://x.com/anuradisanayake/status/2038161871027749214?s=46









