மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி வரலாறு காணாத முடக்கத்தை எதிர்கொண்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக மூடப்பட்டிருப்பதன் காரணமாக, உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் கணிசமான அளவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தற்போது எரிபொருள் பங்கீட்டு முறையை (Fuel Rationing) அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரித்தானியாவில் நிலவும் இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க 'தேசிய எரிபொருள் அவசரகாலத் திட்டத்தை' (NEP-F) அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது.
பிரித்தானியாவின் பெற்றோலிய ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி (Petroleum Consolidation Regulations 2014), ஒருவர் தனது வீட்டில் அல்லது கேரேஜ்களில் உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமலேயே 30 லீட்டர் வரை எரிபொருளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும். எனினும், தற்போதைய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இந்தச் சட்டப்பூர்வ அளவைச் சேமிக்க முற்படுவதால் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
பிளாஸ்டிக் கொள்கலன்களில் 10 லீட்டர் வரையும், உலோக ஜேரிகன்களில் (Jerry Cans) 20 லீட்டர் வரையும் மாத்திரமே சேமிக்க அனுமதி உள்ள நிலையில், பாதுகாப்புக் கருதி இவற்றை வீட்டின் உட்புறப் பகுதிகளில் வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டொலர்களைத் தாண்டியுள்ள நிலையில், பிரித்தானியாவில் ஒரு லீட்டர் பெற்றோல் 150 பென்ஸையும், டீசல் 180 பென்ஸையும் கடந்து பதிவாகியுள்ளது.
இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் விநியோகத்தைச் சீர்செய்யவும், எரிபொருள் நிலையங்களில் ஒருவர் ஒரு தடவைக்கு 30 பவுண்டுகளுக்கு (30 GBP) மேல் எரிபொருள் கொள்வனவு செய்யக் கூடாது என்ற 'அதிகபட்ச கொள்முதல் வரம்பு' விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேவேளை, ஆம்புலன்ஸ், பொலிஸ் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









