மத்திய கிழக்கில் ஈரான், லெபனான், சிரியா மற்றும் காசா என நான்கு முனைப் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் இராணுவம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய ஆள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவத் தளபதி இயால் ஜமீர் (Eyal Zamir) அதிரடியாக எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குப் போதிய இராணுவ வீரர்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்திற்குப் பெரும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேல் இராணுவத்தில் தற்போது சுமார் 12,000 வீரர்கள் பற்றாக்குறையாக உள்ளமை, போர்க்களத்தில் உயிரிழந்த அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாகக் கருதப்படுகின்றது.
சுமார் 3 இலட்சம் தன்னார்வ ரிசர்வ் படைகள் (Reserve Forces) போர்க்களத்தில் இறக்கப்பட்ட போதிலும், நான்கு நாடுகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்க அவர்கள் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், போர்க்களத்தில் காயமடையும் வீரர்களுக்குச் சரியான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதில்லை எனவும், பல இடங்களில் காயமடைந்தவர்கள் உரிய சிகிச்சையின்றி அங்கேயே கைவிடப்படுவதாகவும் 10 முக்கிய குற்றச்சாட்டுகளை இராணுவத் தளபதி முன்வைத்துள்ளார்.
இந்த ஆள் பற்றாக்குறை காரணமாக இஸ்ரேல் இராணுவத்தின் தற்காப்பு நடவடிக்கைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள அதேவேளை, இந்தப் போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்தால் உலகப் பொருளாதாரம் தலைகீழாக மாறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறுபுறம், சர்வதேசப் போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ள நிலையில், இந்திய அரசாங்கம் பெட்ரோல் மீதான வரியைக் குறைத்து லிட்டருக்கு 10 ரூபாயைக் குறைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் நடைபெறவுள்ள நான்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை இதுவெனவும், தேர்தல் முடிந்த பின்னர் பெற்றோல் மற்றும் எரிவாயு (LPG) விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரக்கூடும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் கப்பல்கள் ஆபிரிக்கக் கண்டத்தைச் சுற்றிப் பயணிக்க வேண்டியுள்ளதால், போக்குவரத்துச் செலவு 10 மடங்கு அதிகரித்துள்ளதுடன் டாட்டா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் வாகனங்களின் விலையை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









