மத்திய கிழக்கில் நான்கு வாரங்களாக நீடித்து வரும் உக்கிரமான போர்ச் சூழலுக்கு மத்தியில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று (25) அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலினால் அங்குள்ள எரிபொருள் களஞ்சியமொன்று தீப்பற்றி எரிந்து வருகிறது.
ஈரானினால் ஏவப்பட்ட தற்கொலைத் ட்ரோன்கள் (Kamikaze Drones) விமான நிலையத்தின் முக்கிய எரிபொருள் விநியோகப் பகுதியைத் தாக்கியுள்ளதாகக் குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அப்துல்லாஹ் அல்-ரஜ்ஹி (Abdullah Al-Rajhi) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தீயணைப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை
தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த குவைத் தீயணைப்புப் படையினர் மற்றும் விமான நிலைய அவசரக் கால மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆரம்பகட்டத் தகவல்களின்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை எனவும், சொத்துக்களுக்கு மாத்திரம் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு ட்ரோன்கள் இடைமறிப்பு
இன்று அதிகாலை குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 6 ட்ரோன்களைத் தமது வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் (Air Defenses) வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாகக் குவைத் தேசிய பாதுகாப்புப் படை (National Guard) தெரிவித்துள்ளது. தாக்குதலின் போது ஏற்பட்ட வெடிச்சத்தங்களினால் விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஈரானின் நேரடி எச்சரிக்கை
இந்தத் தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC), குவைத், ஜோர்தான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளுக்கு இடமளித்துள்ள இராணுவத் தளங்களைக் குறிவைத்தே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெஹ்ரான் தெரிவித்துள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு
ஏற்கனவே பிராந்திய போர் காரணமாகக் குவைத் விமான நிலையம் வணிக ரீதியிலான விமானங்களுக்குப் பெருமளவில் மூடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தாக்குதல் காரணமாக அங்குள்ள எஞ்சிய சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 8 மற்றும் 14 ஆகிய திகதிகளிலும் இதே போன்ற ட்ரோன் தாக்குதல்கள் குவைத் விமான நிலையத்தின் ரேடார் மற்றும் முனையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







