அமெரிக்காவின் நியூயோர்க் - லாகார்டியா சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய விமான விபத்தில், பயணிகள் விமானத்தின் பிரதான விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மொன்றியல் நகரிலிருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் நியூயோர்க் நோக்கிப் பயணித்த 'எயார் கனடா எக்ஸ்பிரஸ்' (Air Canada Express) நிறுவனத்திற்குச் சொந்தமான CRJ-900 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
நேற்றிரவு 11.45 மணியளவில் குறித்த விமானம் லாகார்டியா விமான நிலையத்தின் 4ஆம் இலக்க ஓடுதளத்தில் (Runway 4) தரையிறங்கியுள்ளது. இதன்போது, வேறொரு அவசரத் தேவைக்காக ஓடுதளத்தைக் கடக்க முற்பட்ட விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனத்துடன் (Fire Truck) விமானம் அதிவேகமாக மோதியுள்ளது.
இந்தக் கோர மோதலில் விமானத்தின் முன்பகுதி (Nose) மற்றும் விமானிகள் அறையுள்ள பகுதி (Cockpit) முற்றாகச் சிதைவடைந்துள்ளன. இதில் படுகாயமடைந்த விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை (FAA) தெரிவித்துள்ளது.
மயிரிழையில் தப்பிய பயணிகள்
விமானம் ஓடுதளத்தில் மோதிய போது ஏற்பட்ட கடும் அதிர்வினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. எனினும், விமானத்திலிருந்த 72 பயணிகளும் எவ்வித உயிர்ச்சேதமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அவர்களில் காயமடைந்த சுமார் 32 பேர் மேலதிக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கை
விபத்து இடம்பெறுவதற்கு சில விநாடிகளுக்கு முன்னர், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து (Air Traffic Control) குறித்த வாகனத்தை நிறுத்துமாறு "Stop, stop, stop" எனத் தொடர்ச்சியாக அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டமை கறுப்புப் பெட்டி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து லாகார்டியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து புறப்படவிருந்த மற்றும் அங்கு வருகை தரவிருந்த அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.







