இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதன் 106ஆவது பேராயராகவும் (Archbishop of Canterbury), முதலாவது பெண் தலைவராகவும் சாரா முல்லல்லி எதிர்வரும் புதன்கிழமை உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார்.
முன்னாள் பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby) பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சாரா முல்லல்லி பரிந்துரைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்லஸினால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
கேன்டர்பரி நோக்கி 140 கிலோமீற்றர் பாதயாத்திரை
தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியேற்பு விழாவிற்குத் தயாராகும் வகையில், பேராயர் சாரா முல்லல்லி லண்டன் புனித பால் கதீட்ரலில் இருந்து கேன்டர்பரி வரை சுமார் 140 கிலோமீற்றர் தூரம் கொண்ட 6 நாட்கள் பாதயாத்திரையை (Pilgrimage) நேற்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
பதவியேற்பு விழாவின் சிறப்பம்சங்கள்
எதிர்வரும் புதன்கிழமை கேன்டர்பரி கதீட்ரலில் நடைபெறவுள்ள இந்த விசேட ஆராதனையில், பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் உட்பட 2,000க்கும் மேற்பட்ட அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பதவியேற்பின் ஒரு பகுதியாக, கதீட்ரலின் மேற்கு வாசலில் நின்று அவர் கதவைத் தட்டி அனுமதி கோரும் பாரம்பரிய சடங்குடன் விழா ஆரம்பமாகும். இந்த வழிபாட்டின் போது உருது உட்பட பல்வேறு உலக மொழிகளில் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் சவாலான பணி
63 வயதான சாரா முல்லல்லி, மதகுருவாக மாறுவதற்கு முன்னர் இங்கிலாந்தின் சுகாதாரத் துறையில் பிரதம தாதியதிகாரியாகப் (Chief Nursing Officer) பணியாற்றியவர். எனினும், பெண் ஒருவர் திருச்சபையின் தலைமைப் பதவிக்கு வருவதை ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த சில பழமைவாத கிளைத் திருச்சபைகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இவ்வாறான முரண்பாடுகளைக் களைந்து, உலகெங்கிலும் உள்ள 85 மில்லியன் ஆங்கிலிக்கன் விசுவாசிகளை ஒன்றிணைப்பதே இவரது பிரதான சவாலாக இருக்குமெனப் பொருளாதார மற்றும் சமூக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.







